search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் ஆசி"

    மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்ற சித்தராமையாவின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக உள்ளனர்.

    இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குமாரசாமி டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது கூட்டணி அரசு தொடர்பாக கருத்துக்களை வெளியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் தடை விதித்து இருந்தது. இதனால் அவர் கூட்டணி அரசு குறித்து கருத்து ஏதும் கூறாமல் மவுனம் காத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் பேசிய பேச்சால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் நேற்று இரவு நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

    மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன். 2-வது முறையாக நான் முதல்-மந்திரி ஆவதை எதிர்கட்சிகள் கைகோர்த்து கொண்டு தடுத்தன. எதிர்பாராத விதமாக என்னால் முதல்-மந்திரியாக முடியவில்லை. ஆனால் இதுவே இறுதி அல்ல. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமானது.

    கர்நாடகத்தில் ஜாதியும், பணமும் அரசியலில் பரவி கிடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சித்தராமையா அடிக்கடி குமாரசாமி அரசை விமர்சித்து பேசி வருவதால் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அதிருப்தியுடன் இருந்து வருகிறார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விழாவில் பேசிய குமாரசாமி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்தார். அப்போது அவர் பேசியது, ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசில் விரிசல் இருப்பதை காட்டியது. இது குறித்து குமாரசாமி பேசிய பேச்சு வருமாறு:-

    முதல்- மந்திரி பதவி என்பது ரோஜா பூக்களால் நிறைந்த படுக்கை அல்ல. அது முட்கள் நிறைந்தது. மக்களுக்காகவே முதல்-மந்திரி பதவியில் இருக்கிறேன். நெருக்கடி அதிகரித்தால் ராஜினாமா செய்ய தயார்.

    இவ்வாறு குமாரசாமி பேசியதால் அந்த நேரத்தில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன் பிறகு தற்போது சித்தராமையா பேசிய பேச்சால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. #Siddaramaiah

    ×